Monday, January 8, 2024

அபிராமியம்மை பதிகம்

 

              திருக்கடையூர்

 அபிராமியம்மை பதிகம்

நாட்டை               காப்பு                   விருத்தம்  

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம் நால் 

வாய்ஐங் கரன்தாள் வழுத்துவாம்-நேயர் நிதம் 

 எண்ணும் புகழ்க் கடவூர் எங்கள் அபிராமவல்லி 

நண்ணும்பொற் பாதத்தில் நன்கு




ஸௌராஷ்டிரம்            நூல்        விருத்தம்

கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்குங் கலாமதியை நிகர் வதனமுங்

கருணைபொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங் கூந்தலுஞ் 

சங்கையில்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணந்தங்குமணி மிடறு மிக்க 

சதுர்பெருகு துங்கபா சாங்குசம் இலங்கு கர தலமும் விர லணியும் அரவும்

புங்கவர்க்கு அமுதருளும் அந்தர குசங்களும் பொலியும் நவ மணிநூபுரம்

பூண்ட செஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றியென வாழ்த்த விடைமேல் மங்கள மிகுந்தநின் பதியுடன் வந்து, அருள்செய் வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!   1


ஸௌராஷ்டிரம்                        கண்டசாபு

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் 

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் 

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் 

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும் 

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்ட ரொடு கூட்டு கண்டாய்

 அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே! ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!  2

பொருள்

கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!



விருத்தம்                                பூர்வீகல்யாணி 

சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசுலோசன மாதவி 

சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்றருங் கருணாகரி 

அந்தரி வராகி சாம்பவி அமர தோத்தரி அமலை செக சால சூத்ரி 

அகிலாத்ம காரணி வினோதசய நாரணி அகண்ட சின்மய பூரணி 

சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி! கெளமாரி உத்

துங்க கல்யாணி புஷ்பாஸ்திராம்புயபாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி 

அந்தரி மலர்பிரமராதி துதிவேத வொலி வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! 

சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி 

மகிழ் வாமி அபிராமி! உமையே! 3


பூர்வீகல்யாணி                             கண்டசாபு

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும் 

கர்ண குண்டலமு மதிமுக மண்டலம் நுதற் கஸ்தூரிப் பொட்டு மிட்டுக்

கூரணிந்திடு விழியும் அமுத மொழியுஞ் சிறிய கொவ்வையின் கனி அதரமும் 

குமிழனைய நாசியும் முத்த நிகர் தந்தமும் கோடு சோடான களமும் 

வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும் மணி நூபுரப் பாதமும்

வந்தெனது முன் நின்று மந்தகாச முமாக வல்வினையை மாற்றுவாயே 

ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள்வாமி! அபிராமியே! 4


ஹிந்தோளம்                           விருத்தம்

வாசமலர் மருவளக பாரமும் தண்கிரண மதிமுகமும் அயில் விழிகளும் 

வள்ளம்நிகர் முலையும் மான் நடையும் நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார் 

பாச பந்தத்திடை மனங் கலங்கித் தினம் பலவழியும் எண்ணி யெண்ணிப் 

பழிபாவம் இன்ன தென்று அறியாமல் மாயப்ர பஞ்ச வாழ்வு உண்மை என்றே

ஆசை மேலிட்டு வீணாக நாய்போல் திரிந்து அலைவதல்லாமல் உன்றன்

அம்புயப் போதெனுஞ் செம்பதம் துதியாத அசடன்மேற் கருணை வருமோ? 

மாசிலாது ஓங்கிய குணாகரி பவானி சீர் வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! 

சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே! 5


ஹிந்தோளம்                                 கண்டசாபு

மகரவார் குழல்மேல் அடர்ந்து குமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து

மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள் வரம் பெற்ற பேர்களன்றோ

செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்து மேற் சிங்கா தனத்தி லுற்றுச் 

செங்கோலும் மநுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு 

புகர் முகத்(து) ஐராவதப்பாகராகி நிறை புத்தேளிர் வந்து போற்றிப் 

போக தேவேந்திரன் எனப் புகழ விண்ணில் புலோமிசை யொடுஞ் சுகிப்பர் 

அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே! ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாதசுகபாணி! அருள்வாமி! அபிராமியே!  6


நாட்டக்குறிஞ்சி                               விருத்தம்

நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள் நவின்றதே உலகி லுள்ளோர்

நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும் 

இன்றென்று சொல்லாமல் நினதுதிரு வுள்ளமது இரங்கி யருள் செய்கு வாயேல்

 ஏழையேன் உய்குவேன், மெய்யான மொழியிஃதுன் இதயம் அறியாதது உண்டோ?

குன்றமெல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள் குமார தேவனை அளித்த

குமரி மரகத வருணி விமலி பைரவி கருணை குலவு கிரிராச புத்ரி

மன்றல்மிகு நந்தன வனங்களில் சிறை அளிமுரல வளர்ந்திருக் கடவூரில் வாழ் வாமி!

சுபநேமி ! புகழ் நாமி சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே! 7


நாட்டக்குறிஞ்சி                                      கண்டசாபு

மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் மாதிரக் கரி யெட்டையும்

மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையும் ஓர்

பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும் புத்தேளிர் கூட்டத்தையும் 

பூமகளையுந் திகிரி மாயவனையும் அரையிற் புலியாடை உடையானையும்

முறைமுறைக ளாயீன்ற முதியவளாய்ப் பழைமை முறைமை தெரியாத நின்னை

மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்று அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய்

அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே! 8

CLICK HERE

AKSHARAM TAMIL VIDEO LESSONS


பந்துவராளி                                             விருத்தம்

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல நான் உலகத்து உதித்த இந்நாள் வரைக்கும்

ஒழியாத கவலையால் தீராத இன்னல் கொண்டு உள்ளந் தளர்ந்து மிகவும்

அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்கும் இவ் அடிமைபால் கருணை கூர்ந்து

அஞ்சேல் எனச்சொல்லி ஆதரிப்பவர்கள் உனை அன்றியிலை உண்மையாக

இருநாழிகைப் போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத்தையும் 

இயற்றி யருளுந் திறங்கொண்ட நீ ஏழையேன் இன்னல் தீர்த்து அருளல் அரிதோ? 

வருநா வலூரர் முதலோர் பரவும் இனிய புகழ் வளர் திருக் கடவூரில் வாழ் வாமி!

சுபநேமி! புகழ் நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி உமையே! 9


பந்துவராளி                                                    கண்டசாபு

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத் தோங்கிவர அருள் மழை பொழிந்தும் இன்ப

வாரிதியிலே நின்ன தன்பெனுஞ் சிறகால் வருந்தாமலே யணைத்துக்

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்ட முதலான சீவ

கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும் 

நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும் 

நின்மலி! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும் நீலியென்(று) ஓது வாரோ?

ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் ஆதிகடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே! 10


இதையும் வாசிக்கவும்👇👇👇

அபிராமி அந்தாதி





No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

✍तैत्तिरीयोपनिषत्

  ॥ तैत्तिरीयोपनिषत् ॥ ॥ प्रथमः प्रश्नः ॥ (शीक्षावल्ली ॥ தைத்திரீயோபநிஷத்து முதல் பிரச்னம் (சீக்ஷாவல்லீ) 1. (பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்ட...