Monday, January 20, 2020

Praveen poorvardh दक्षिणी कथाएँ நூருன்னிசா

Praveen poorvardh
 दक्षिणी कथाएँ
நூருன்னிசா

கதையாசிரியர்: கு.ப ராஜகோபாலன்

கதைத்தொகுப்பு: காதல் 



                           Watch video

         நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசிய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுதும் சிதைவுற்றுக் கிடந்தது.
தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். தன்னந்தனியாக எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக் கூடுமென்று எண்ணிக் கொண்டே அதை உடைத்துப் படித்தேன். பின்வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.
மதராஸ்
குலாம் காதர் கான், எம்.ஏ.,
ப்ரோ. டிப்டி கலெக்டர்.
என் அருமைத் தோழா,
நீ என்னை மறந்திருப்பாயென நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாகக் கடிதம் எழுதாதற்குக் காரணம், எனக்கு நீ இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும், இந்தக் கடிதத்திற்கு மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை நூருன்னிசா. நாம் படித்தபொழுது நம்முடன் விளையாடினவள், நினைவு இருக்கிறதா ? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதிப் பத்திரிகையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன் ‘இன்சியல் ‘களைக் கூட நினைவில் வைத்திருந்ததால்தான் நீ என்று நிச்சயிக்க முடிந்தது. உடனே அவள் சொன்னதன் பேரில், உன் முகவரியைக் கேட்டு வேலூருக்கு, ‘டெமி அபிஷியலா ‘கத் தந்தி அடித்துப் பதில் வரவழைத்தேன். அது இன்று கிடைத்தது.

https://amzn.to/2w1jb6o

நமது பன்னிரண்டாவது வயதில், திருச்சியில் படிக்கும் போது, ஒரு சிறுபிள்ளை சபதம் செய்து கொண்டோமே, நினைவு இருக்கிறதா; நாம் ஒருவரை ஒருவர் அறியாமல் மணம் செய்து கொள்வதில்லை என்று ? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் எனக்குத் திருமணம். பத்திரிகை இதனுடன் இருக்கிறது. நீ வந்தே தீர வேண்டும்.
உன் அன்புள்ள
குலாம் காதர்.
இந்தக் கடிதம் மின்னலைப் போல் என் மனத்தின் மறதி இருளை அப்பொழுது பளிச்சென்று போக்கிற்று. இந்த பத்து ஆண்டுகளாகப் பரதேசிபோல் திரிந்த பொழுதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறுமாதம் சிறையில் இருந்தபொழுதும் அடிக்கடி என் மனத்தில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது என்று தவித்தேன்; அப்பா, அது நூருன்னிசாவுடையதுதான்!
ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று அசைந்தாடும் இரண்டு குறைகூறும் விழிகள். ரோஜாக்களினிடையே மல்லிகை போல கீழ் இதழைச் சற்றே கடித்து வெளியே தொற்றின பல்வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனத்தில் குடிகொண்டு ஆட்டி வைத்ததே – அது அவளுடையது!
அவளுடைய மனநிலையும் என் மனநிலையை ஒத்திருக்கக் கூடுமா என்ன! இல்லாவிட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்/ கூட்டத்திற் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ அவள் கூப்பிடுவது போலிருக்கிறது!
https://amzn.to/2Vm2EVk
2
குலாம் காதருக்கும் எனக்கும் இருக்கும் இந்த நட்பு தொடங்கியதே மிகவும் வேடிக்கையான செய்தி. எனது பத்தாம் வயதில் என்னை என் தகப்பனார் திருச்சியில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என் ‘பக்கத்துப் பையன் ‘. பெண்சாயல் கொண்ட வளர்ந்த வாலிபன்.
ஒருநாள் கணக்குப் போடும்பொழுது குலாம் என் சிலேட்டைப் பார்த்துக் ‘காப்பி ‘ அடித்து விட்டான். அது எப்படி வெளியாயிற்றென்றால், நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய சிலேட்டிலும் காணப்பட்டது. உடனே, ஆசிரியர், நான் ‘காப்பி ‘ அடித்தேனென்று என்னைப் பிரம்பால் அடித்தார்.
குலாம் அன்று மாலை வீட்டுக்குப் போகும்பொழுது என்னைக் கைதட்டிக் கூப்பிட்டான்.
‘நீ ஏன் என்மீது குற்றஞ் சாட்டவில்லை ? ‘ என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.
அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது.
‘அடே, என்னோடு எங்க மோட்டாரில் எங்க வீட்டுக்கு வா. அப்புறம் உங்க வீட்டில் கொண்டு விடுகிறேன் ‘ என்றான்.
காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் விருப்பம் பூர்த்தியாயிற்று. பதினைந்து நிமிடத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குக் கார் விர்ரென்று போய் நின்றது.
கயாசுதீன் சாகேப் ஒரு பெரிய வியாபாரி. ஆற்க்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவராம். வீட்டின் முன் கூடத்தில் பெரிய வெல்வெட்டுத் திண்டுகள் போட்டுச் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரில் உக்காவும் பாத்திரம் ஒன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும், நிலைக் கண்ணாடிகள், பெரிய பெரிய மொகலாயப் படங்கள், பளிங்கு மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று. காலுக்கு மெத்தின்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன.
குலாம் குதித்துக் கொண்டு போய் அவரிடம் ஏதோ சொன்னான். திகைத்துப் போயிருந்த என்னைப் பார்த்து அவர், ‘இங்கே வா! ‘ என்று கூப்பிட்டார். பிற்காலத்தில் நான் மெளலானா செளகத் அலியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம் என்னை அவரிடம் இழுத்துக் கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தம் மனைவியைக் கூப்பிட்டார். உள்ளேயிருந்து அந்த அம்மாளும் அவளுடைய இரண்டு பெண்களும் வந்தார்கள். இப்பொழுது நினைவிலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது வயசு இருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான மாது. அவள் மெதுவாக ஒவ்வோர் அடி எடுத்து வைத்து வந்த பொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சத்தம் செய்தது. மூத்த பெண் அலிமா குட்டையாயும் பருமனாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிசாவோ குலாமைப்போலவே இருந்தாள்.
அப்பொழுது அவளுக்கு எட்டு வயசு இருக்கலாம். இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்கு அப்பொழுது இருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம், கிடையாது. ஆனால் என் மனத்தில் ‘போட்டோ ‘ பிடித்ததுபோல் பதிந்திருக்கிற அம்சங்களையே இப்போது எடுத்து எழுதுகிறேன்.
நூருன்னிசாவின் உருவம் என் மனத்தில் வரைந்த சித்திரம்போல் நிற்கிறது. நான் முதல்முதலில் பார்த்த அன்று அவள் சரிகை மயமாயிருந்த பச்சைப் பாவாடை உடுத்திருந்தாள். இலேசான மஞ்சள் பட்டு இரவிக்கையும், ரோஜாப் பட்டுத் தாவணியும் அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதரசம், கையில் காப்புகள், விரல்களில் மோதிரங்கள், கர்நாடக முஸ்லீம்களைப் போல குருடு முதலியன இல்லை. முகம் என் மனத்தில் அப்படியே இருக்கிறது. நீண்ட புருவங்களும் தலைமுடியும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல் தலைமுடியை முடிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அவளது உடலின் சிவப்புக்கு ஈடே சொல்ல முடியாது. அவளுடைய கண்கள் அவற்றின் தன்மையை எடுத்துச் சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றவை, மீனுருவம் கொண்டவை என்று கவியைப்போல் சொல்லிக் கொண்டே போகலாம்.
கயாசுதீன் தம் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒருதரம் பார்த்துவிட்டு அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளே போய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப் பார்வையை நான் மறக்கவே முடியாது. என் கன்னத்தை ஒருதரம் தாய்போல தடவிக் கொடுத்தாள்.
குலாம் என்னைக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம். புறப்படும்பொழுது வாசற்பக்கம் கண்ணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிசா முக்காட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் கண்களைச் சந்தித்த நிமிடமே உள்ளே ஓடிவிட்டாள்.
அன்று முதல் நானும் குலாம் காதரும் இணைபிரியாமல் திரிந்தோம்; விளையாடினோம்; அரட்டைகள் அடித்தோம். ஆகாயக் கோட்டைகள் கட்டி மகிழ்ந்தோம். எந்நேரமும் நான் அவனுடைய வீட்டில்தன் இருப்பேன். நூருன்னிசாவும் எங்களுடன்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பாள். தானும்கூட விளையாடுவாள். தெரியாமல் பின்னால் ஒளிந்து வந்து, என் கண்களைப் பொத்துவதில் அவளுக்கு ஓர் ஆனந்தம். ஏன், எனக்குந்தான் ஒருவித மகிழ்ச்சி அப்பொழுது உண்டாகும். அவளுடைய கைகள், மென்மையாக ரோஜா மலர்போல இருக்கும். கைகளை எடுத்து விட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவளுடைய கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனம் என்னவோ நான் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியை அடையும்.
நாலாம் பாரம் வரையில் நானும் குலாமும் இபடி இருந்தோம். திடாரென்று என் தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றி விட்டார்கள் பிறகு எனக்கும் குலாமுக்கும் சந்திப்பே கிடையாது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருக்கிறதென்றால் என் மகிழ்ச்சியை என்னென்பது ?
மறுநாள் இரவு வண்டியில் சென்னைக்குப் புறப்படேன்.


https://amzn.to/38Sm5J7
3
உறவினர்கள் நிறைந்த அந்தப் பங்களாவில் குலாம் என்னைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பழைய நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான். முகம்மது காசிம் என்ற பாடகரின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா மலர்கள்! அத்தரும் பன்னீரும் நீர் பட்டபாடாய் வழங்கப்பட்டன. குலாம் என்னைப் பங்களாவின் மேல் மாடியிலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
குலாமின் தாய் மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். நான் இருப்பதைப் பார்த்துச் சட்டென்று பின்வாங்கி முகத்தை மூடிக் கொண்டாள்.
‘அம்மா யாரென்று எண்ணுகிறாய் ? நம்… ‘ என்று குலாம் பேச்சைத் தொடங்கினான்.
‘ஆம். நினைவிருக்கிறது. நலந்தானே, தம்பி ? ‘ என்று கேட்டுக் கொண்டே மெதுவாக அந்த அம்மாள் முன் வந்தாள்.
‘நலந்தான், அம்மா! ‘
‘எங்கே இருக்கிறாய் ? ‘
‘திருச்சியில் இருக்கிறேன். ‘
‘திருமணம் ஆயிற்றோ ? ‘
‘இல்லை! ‘
பேசும்பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால், இன்னும் ஓர் இளம் உருவம் நிழல் போல நிற்பது போன்ற பிரமை தட்டியது எனக்கு. ஒரு நிமிடம், நூருன்னிசாவே என் முன் தோன்றுவாளோ என்ற ஆசை! மறுநிமிடம், ‘சே! அது எப்படி முடியும் ? அவள் பர்தாப் பெண் அல்லவா ? குலாமும் கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில் அவளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே ? ‘ என்ற நினைப்பு ஏற்பட்டது. அவளைப் பற்றிக் கேட்கக்கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான் குலாமுடன் வழக்கம் போல் பேசலானேன்.
இரவு பத்து மணிக்குக் குலாம் படுத்துக்கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள்.
என் தனியறையின் தனிமையில் நான் படுக்கையில் படுத்துப் புரண்டேன். மின்சார விளக்கின் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால், அதை அணைத்துவிட்டுச் சாளரத்தைத் திறந்து வைத்தேன். அதன் வழியாக முழுநிலவு என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பியது. படுக்கையில் உட்கார்ந்து கொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன்.
அதே வீட்டின் ஒரு பாகத்தில் ‘அவளும் ‘ அப்பொழுது உலவிக் கொண்டிருந்தாளல்லவா!
என் இருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ? முடியாதுதான்! அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு என்னை ஏன் இங்கு வரவழைத்தாள் பின்னே ? என்னிடத்தில் அவளுக்கு ஓர்… அதெப்படி நான் சொல்லுவது ?
இப்படி என் பேதை மனம் கேள்விகளும் மறுகேள்விகளும் போட்டுக் கொண்டு கடல்போல அலையலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது.
நடுநிசி ஆயிற்று. எனக்குத் தூக்கம் வரவே இல்லை. பட்டணத்தின் ஓசையும் அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து கடலின் ஓலந்தான் காற்றில் மிதந்து வந்தது. திடாரென்று மனத்தில் ஓர் ஆவல் மூண்டது. ‘ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிசா பார்க்க வரக் கூடுமா ? அல்லது என்னைத்தான் எங்கேயாவது எதிர்ப்பார்க்கிறாளோ ? ‘ என்று நினைத்தேன்.
மெதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிசாதான்! வந்து எனக்கு அருகே இருந்த சாளரத்தின் அப்புறத்தில் நின்றாள். அதே உருவந்தான்! வயதிற்கு ஏற்ற வாட்டசாட்டம் மட்டுமே வேறாக இருந்தது. நிலவில் முகம் தெளிவாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று, ‘எண்ணினபடி ஆயிற்றே! ‘ என்றேன்.
ஒருவிரலால் தன் உதடுகளை அவள் பொத்திக் காட்டினாள். தன் மார்பில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தாள்.
‘இதை ஊருக்குப் போய்ப் படி, நாளைக்குக் காலையிலேயே புறப்பட்டு விடு! பார்த்தாய்விட்டது. ஒரு நிமிடம் தாமதிக்கக் கூடாது ‘ என்று சொல்லித் திரும்பினாள்.
சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தாள்! நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய அழகான முகத்தில், கலவரத்தினால் முத்து முத்தாய் வேர்வை துளித்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப் பற்றினேன்.
ஒரு நிமிடம் அப்படியே நின்றோம்!

மறுநொடியில் மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு போய்விட்டாள்.



4
மறுநாள் காலை நான் பயணத்திற்குத் தயாராயிருந்ததைக் கண்டு குலாமிம் முகம் வாட்டமடைந்தது.
‘என்ன சேதி ‘ என்றான்.
‘அதுதான் ஒருநாள் இருந்தாயிற்றே; மற்றொரு சமயம் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் அலுவல் இருக்கிறது ‘ என்றேன்.
அரைமணிக்குள் அந்தப் பங்களாவை விட்டு வெளியேறி விட்டேன்.
திருச்சியில் காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து சாளரத்தின் வழியாகத் திரும்பவும் அதே சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன், எவ்வளவு மாறுபட்ட மனநிலையில்! கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.
‘இக்கடிதத்தை என் வாக்காகவும் என் அடையாளமாகவும் நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனத்தில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னம் அகலவில்லை. ஏனென்றால், உன் உருவம் எப்போதும் சிலைபோல என்முன் நிற்கிறது.
நான் என்றென்றும் இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இந்தப் பிறவியில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை முன்பு அவுரங்கசீப்பின் தங்கை ஜெபுன்னிசா கழித்ததுபோல கழிக்கப் போகிறேன். என் தாயிடம் உனக்குத் திருமணமாகவில்லை என்று நீ சொன்னது எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இனிமேல் நீ வேறொரு பெண்ணிடம் ஈடுபடாமல் உன் வாழ்நாட்களை என் மனத்தோடு மட்டும் ஒன்றும்படி காலம் கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ எனக்குப் பதில் எழுத வேண்டாம். நீ செய்வாய் என்று எனக்கு ஒரு திடநம்பிக்கை இருக்கிறது. அதுவே என் உயிர்நாடி.
நான் மெய்ம்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாம் இருவரும் இவ்வுலகில் கணவன் மனைவியல்ல. எப்போதும், உடல் ஆசை வேண்டாம் நமக்கு. நினைவென்னும் வானத்தில் ஒளிரும் இன்பமெனும் முழுநிலவுக்குக் களங்கம் உண்டாக்காதிருப்போம்! சரிதானே.
நூருன்னிசா ‘
அவ்வொளி மயக்கத்தில் அவளே முழு மதியின் உருவில் வந்து என்னிடம் வாக்கு வாங்குவதுபோல் இருந்தது.
என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலகவழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் எல்லாச் செயல்களிலும் நான் நினைத்ததும் என் முன் தங்கப் பதுமை போல வந்து நின்று என்னை ஊக்கி வருகிறாள். அவள் என் சோர்விலும் என் மனத்தின்முன் குதித்துக் கொண்டு வந்து நின்று எனக்கு ஆறுதல் தருகிறாள்.

நன்றி!!




No comments:

Post a Comment

thaks for visiting my website

एकांकी

नमस्ते और नमस्कार - अन्तर

 नमस्ते और नमस्कार दोनों ही हिंदी में सम्मान और आदर के प्रतीक हैं, लेकिन इनमें कुछ अंतर हैं: नमस्ते (Namaste) नमस्ते एक पारंपरिक हिंदू अभिवा...