Visharadh poorvardh
இலக்கியக் கனிகள்
1. திருமூலர் திருமந்திரம்
முன்னுரை
நந்திதேவர் மரபில் வந்தவர் எண்வகைச் சித்தி கைவரப்பெற்றவர் தவராச யோகி என்று தாயுமானவரால் போற்றப்பட்டவர் திருமூலர், அவர் இயற்றியதே சைவசித்தாந்த முதல் நூல் என்றும், பத்தாம் திருமுறை என்றும் கூறப்படும் திருமந்திரம். அவர் நூல் சிறப்பைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்
பொருள்
ஒருமுறை திருமூலர், திருவாவடுதுறையில் சில பசுக்கள், பாம்பு கடித்து இறந்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனைச் சூழ்ந்து கதறக் கண்டார். இந்நிலையில் இறைவன் திருவருளால் அப்பசுக்களின் துயரைப் போக்கக் கருதித் தம் உடலை ஓர் இடத்தில் மறைத்து வைத்துத் தம் உயிரை அம்மூலன் உடலில் புகுத்தினார் மூலன் உயிர் பெற்று எழக்கண்ட பசுக்கள் அவரை மோந்து கனைத்தன; துள்ளின. கன்றை நினைந்து ஊர் நோக்கிச் சென்றன. மூலன் மனைவி தெருவில் நிற்கும் திருமூலரைத் தன் கணவன் எனக்கருதி அழைக்க நமக்குத் தொடர்பு ஒன்றும் இல்லை' என்று கூறித் திருமூலர் பொதுமடம் நுழைந்தார். தம் உடல் தேடியும் காணப்பெறாதது கண்டு இறைவன் ஆகம உண்மைப் பொருளை உலகிற்கு அருளிச் செய்யவே தம் உடலை மறைத்தார் போலும் என்று கருதித் திருவாவடுதுறையில் ஓர் அரசமரத்தின் கீழ் இருந்து ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார்.
இவ்வாறு திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரம் கொண்டது. அது சாத்திர நூல்; தோத்திர நூல் அறநூல். உள் நிகழும் நெறியாவருக்கும் ஒக்குமல்லவா திருமூலர் கருத்தும், திருவள்ளுவர் கருத்தும் பல இடங்களில் ஒன்று படக் காணலாம். எடுத்துக்காட்டாகக் காகம் தனக்குக் கிடைத்த இரையினைத் தனித்து உண்ணாது. பிற காகங்களையும் அழைத்து உண்ணும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். இக்கருத்தைத் திருமூலரும் காக்கை வாயிலாக
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை
உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே
என்று கூறுகின்றார்.
திருவள்ளுவர் வறுமை கொடியது அதை விடக்கொடியது ஒன்றும் இல்லை என்று கூறுகின்றார். திருமூலரும் வறுமை உற்றவர்களுக்குக் கொடை இல்லை, கோளில்லை, கொண்டாட்டமில்லை. அவர் நடைப்பிணம் என்கின்றார். நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம் என்று திருவள்ளுவர் நிலையாமையைப் பற்றிக் கூறுகின்றார்.
திருமூலரும், உணவு உண்ட மனைவியுடன் பேசி இருந்த இடப்பக்கம் வலி என்று படுத்த மணாளன் இயற்கை எய்தினான் என்று கூறுகின்றார்.
திருவள்ளுவர், ஆசை இல்லாதவருக்குத் துன்பம் இல்லை என்று கூறுகிறார். இவ்வாறே திருமூலரும் ஆசை விட விட ஆனந்தம் ஆம் என்று முடிக்கின்றார்.
திருமந்திரம் பல உவமைகளைத் தன்பால் கொண்டது. எடுத்துக்காட்டாகப் பலாக்கனி விட்டு ஈச்சம்பழம் நயப்போர் நாடி உண்பது போலப் பிறன்மனை மனையாள் அகத்திருக்கப் பிறர் மனையாளை விரும்பும் செயல் உள்ளது என்கின்றார். மலரில் மணம் மறைந்திருப்பது போலக் கண்ணுக்குத் தெரியாமல் சீவனில் சிவம் கலந்திருக்கும் என்ற உண்மையை,
பூவினில் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது
என்று உவமை மணம் கமழ உயர்ந்த உண்மை ஒன்றைக் கூறுகின்றார்.
இறுதியாகச் சில தத்துவப் பொருளை நகைச்சுவை தோன்ற எளிய முறையில் கூறி உயர்ந்த உண்மையை விளக்குவார் திருமூலர். எடுத்துக்காட்டாகக் கத்திரி விதைக்கப் பாகல் முளைத்துப் பின் தோண்டிப் பார்க்கப் பூசணி பூக்கத் தோட்டக்குடிகள் தொழுது ஓடப் பின்னர் தோட்டம் முழுவதும் வாழை பழுத்தது என்கிறார். இதன் உண்மை யோகப் பயிற்சி செய்ய வைராக்கியம் தோன்றும், தத்துவ ஆராய்ச்சி செய்யச் சிவம் தோன்றும், சிவம் தோன்ற ஐம்பொறி அடங்கும் ஆன்ம லாபம் கிட்டும் என்பதாகும். ஐம்பொறிகளை அடக்கி ஆள்வோர் பேரின்ப வாழ்வில் திளைப்பர் என்ற உண்மைப் பொருளைக் கூறவரும் திருமூலர் மேய்ப்பார் இன்றித் திரியும் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியும்' என்று கூறுகின்றார்.
முடிவுரை:
இவ்வாறு சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை எனப் போற்றப்படும் திருமூலர் திருமந்திரம் தன்னேரிலாத உயர்ந்த உண்மைகளைக் கொண்ட உயர்ந்த தமிழ்க் கருவூலம் என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
************************
1. இலக்கியம் காட்டும் இன்பத் தம்பியர்
முன்னுரை
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண் பாடுவது தமிழ் மரபு. உடன் பிறவாதோரையும் உடன் பிறந்தவராகக் கொண்டு வாழ்வது தமிழர் மரபு ஆதலின், இலக்கியம் காட்டும் இன்பத் தம்பியர் சிலர் வரலாற்றை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பொருள்
'கல்வியில் பெரியவர் என்று போற்றப்படும் கம்பர் தாம் இயற்றிய இராம காதையில் வரும் தம்பியர் பலர் அவருள் ஒருவனே இலக்குவன் இவன் இராமன்பால் பெரும் பற்றுக் கொண்ட தம்பி. இராமன் கானகம் சென்றபோது தானும் நிழல்போல உடன் சென்றவன். இராமன் சிற்றன்னையால் காடு செல்ல நேர்ந்தது என்பது கேள்வியுற்றுச் சீற்றங் கொண்டு கைகேயியின் எண்ணம் நிறைவேற விடேன்' என்று வெகுண்டு கூறி நின்றவன். இவன் இராமனை மீட்டு நாட்டிற்கு அழைத்துச் செல்ல வரும் பரதன் பண்பு உணராது அவனைக் கொன்று அழிப்பதாகக் கூறி நின்றவன். இவ்வாறு இவன் கொள்ளும் சீற்றம் எல்லாம் இராமன் பால் வைத்த பேரன்பே காரணம் ஆகும்.
அயோமுகி என்ற அரக்கி இலக்குவனைத் தூக்கிச் செல்ல, அவனைக் காணாது வருந்திய இராமன்,
அறப்பால் உளதேல் அவன்முன் னவனாய்ப்
பிறப்பால் உறின் வந்து பிறக்க
என்று கூறி இறக்கத் துணிகிறான். ஆனால், தம்பியால் மூக்கு அறுபட்ட அரக்கி அயோமுகி குரல் கேட்டு அவன் இருப்பிடம் உணர்ந்து கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைகிறான். இவ்வாறே, இந்திரசித்து ஏவிய நாகபாசத்தால் இலக்குவன் இறந்தால் தானும் இறப்பேன்' என்று இராமன் கூறுவது அவன் அன்பின் ஆழத்தைக் காட்டும்.
அடுத்துக் கம்பர் காட்டும் தம்பியாம் பரதனின் பண்பு நலத்தைப் பார்ப்போம். இராமன் நாடு ஆளாமல் காடு ஆள நேரிட்ட பொழுது தன் தாய் கோசலையிடம்
பங்கமில் குணத்து எம்பி பரதனே
துங்கமா முடிசூடுகின்றான்
என்று கூறுகிறான்
இவ்வாறே தந்தையை இழந்த, இராமனைப் பிரிந்த பரதனும், அந்தமில் பெருங்குணத்து இராமனே, தன் தந்தையும், தாயும், தம்முனும் ஆதலால் அவனைக் கண்டு வணங்கினாலன்றித் தன்துயர் தீராது என்று கூறுகின்றான். தாய் வாங்கிக் கொடுத்த ஆட்சியைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி இராமனை மீட்கக் காடு போந்த பரதன் பண்பிற்கு ஆயிரம் இராமர் ஒன்று சேர்ந்தாலும் அவன் ஒருவனுக்கு ஈடாக மாட்டார்கள் என்று குகன் கூறும் கூற்றுக்கு மாற்றுரைக்கக் கல் இல்லை. இராமனே பரதனைச் "சேணுயர் தருமத்தின் தேவி என்றும் 'செம்மையின் ஆணி என்றும் போற்றி உரைக்கின்றான்
குலத்தினால் தாழ்ந்து, கொள்கையால் உயர்ந்து தொடர்ந்து தம்பியாக இராமனால் போற்றப்பட்டவன் கங்கை வேடன் குகன். இவன் இராமனிடத்துப் பேரன்பு கொண்டவன். அதனால் தான் இராமனை மீட்கப் படையுடன் வந்த பரதனை அவன் மனநிலை உணராது இராமனைக் காட்டிற்கு அனுப்பியதோடு அவன் மீது போர் தொடுக்கவும் வருகின்றான் என்று கருதி அப்பரதன் படைகளை எலிகளாகவும், தன்னைப் பாம்பு எனவும் கூறுகின்றான். ஆனால் மரவுரி தரித்து, உடல் மாசடைந்து, ஒளியிழந்த முகம் கொண்டு துன்பமே உருவமாய் இராமன் சென்ற திசை நோக்கித் தொழுது வருகின்ற பரதனைக் கண்டு தன் மனக்கருத்தினை மாற்றிக் கொள்கின்றான். வில்கையிலிருந்து விழ விம்முகிறான் எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்ற முடிவுக்கு வருகின்றான்.
இனி, இராவணன் தம்பியாம் கும்பகருணனின் சிறப்பைக் காண்போம். கும்பகருணன் தோள் வலிமை வாய்ந்தவன். அவன் இருதோள் அகலம் காணப் பலநாள் பிடிக்குமாம். செஞ்சோற்றுக் கடன் கழிக்க விரும்பிய கும்பகருணன் தன் தமையன் செய்வது தவறு என்று அறிந்தும், தன்னை நெடிது நாள் வளர்த்த போர்க்கோலம் செய்வித்துப் போருக்கு அனுப்பிய இராவணனுக்காகவே போரிட்டு மாள்வேன்; நீர்க்கோலம் போன்ற நிலையாத வாழ்வை விரும்பேன் என்று கூறும் அவன் கூற்று செய்ந்நன்றி மறவாத சீலத்திற்கு தலைவனாம் தலைவனாம் ஓர் உரைகல் இன்னும் குரங்கினத் சுக்கிரீவனையும், வீடணனையும் அரக்கர்குலத் தம்பியாக ஏற்று வாழ்ந்தவன் கோசல நாடு உடைய வள்ளல் எனப் போற்றப்படுகின்ற இராமன்.
இவ்வாறு வில்லின் பெருமை கூறும், இராம காதை கூறும் தம்பியர் சிலரைக்கண்ட நாம் வேலின் பெருமை கூறும் கந்த புராணம் காட்டும் தம்பி ஒருவனைக் காண்போம், சிவனருள் பெற்றவன் சூரபதுமன். அவன் ஆறிருதடந்தோள் ஆறுமுகனைப் பாலன் என்று கருதி அவனோடு பொருது மைந்தரை இழக்கின்றான். தம்பி சிங்கமுகனைப் போருக்கு அனுப்புகின்றான். மைந்தரையும் மதிசால் அமைச்சரையும் சூரபதுமனுக்கு அறிவுரை இழந்த கூறத்தொடங்கிய அருமைத்தம்பி சிங்கமுகனின் அறிவுரை, தமையனுக்கு நஞ்சாகத் தோன்றிற்று கெடுமதி கண்ணுக்குத் தெரியாதல்லவா?
கந்தனாம் ஒருவனைக் கடக்கப் பெற்றிடின்
வந்து உனைக் காண்பன் .
என்று வஞ்சினம் கூறிப் போர்மேற் சென்று மடிந்து புகழ் பெறுகிறான் சிங்கமுகன்
முடிவுரை
இவ்வாறு, இராம காதையும், கந்த புராணமும் காட்டும் தம்பியர் வரலாறு செய்ந்நன்றி மறவாத சீலத்திற்கு - கடமை உணர்ச்சிக்கு - உண்மை அன்பிற்கு ஒரு பிறப்பிடம் என்றால் அவர் பெருமையை என்னென்பது.!
*********************
3. இலக்கியக் கரும்பு
முன்னுரை
ஒரு நாட்டின் பழமையின் பெருமையைக் காட்டுவது இலக்கியம். நம்முன்னோர் நமக்குக் கொடுத்து விட்டுப்போன கருவூலம் இலக்கியம். அது கூறும் கரும்பின் சிறப்பைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்
பொருள்
ஒரு நிலத்திற்கு அழகு நெல்லும், கரும்புமாம். இவ் விரண்டினுள் கரும்பினை இவ்வுலகிற்குக் கொணர்ந்தவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் எனத் தங்கம் நிகர் சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு கூறுகின்றது.
இத்தகைய கரும்பு பல்வேறு இலக்கியங்களில் பாங்குற எடுத்தாளப்படுகிறது, தமிழ்நாட்டுச் சாக்கிரடீஸ் என்று போற்றப்படும் திருவள்ளுவர் இழோர் நன்கு ஒறுக்கப்பட்ட பின்னரே பயன்படுவர் என்பதைக் கூறவருங்கால் ஆலையில் இட்டுப் பிழியச் சாறு தரும் கரும்பையே உவமையாகக் காட்டுகிறார் செகவீரபாண்டியன் தாம் இயற்றிய குமரேச வெண்பாவினுள் திருக்குறள் கருத்தைப் பின்பற்றிப் பாண்டவர் சொல்லக் கொடாத துரியோதனன், அவர் கொல்லக் கொடுத்தான் என்று கூறவருகின்றவர், கரும்பு போல் கொல்லப் பயன்படும் கீழ்' என்ற தொடரையே ச காட்டுகின்றார். நீதி நூல்களில் ஒன்றாகிய நாலடியாரும் - நற்குடிப் பிறந்தார் எவ்வளவு வருந்தினும், இகழினும் மனம் மாறுபடாத் தீய சொற்களைக் கூறார்; நன்மையே - புரிவர் என்பதைக் கூற வருங்கால் கரும்பைக் கடித்தும், இடித்தும் சாறு கொண்டாலும் அது இன்சுவையே தரும் என்ற தொடரையே காட்டுகின்றது.
அருளாளர்கள் கூறுகின்றனர் இறைவனைக் கரும்பு எனவே நாடு போற்றும் நாவுக்கரசர் 'கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனார்' என்று போற்றுகின்றார். திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் பெயரே 'கரும்படு சொல்லம்மை' ஆகும். இலக்கியங்களில் காமனும், கரும்பு வில்லி என்றும் கரும்பு வில்லோன் என்றும் போற்றப்படுகின்றான்.
கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் உயிர் துறந்த போது அவர் பிரிவு ஆற்றாது உடன்பிறந்த தம்பியாம் வேலையர் தாம் சந்ததி இன்றிக் கரும்பின் கணுப்போல் இருந்து துயர் உறுகின்றேன் என்று கரும்பையே எடுத்தாளுகின்றார்
கொங்குவேள் என்பவரால் இயற்றப்பட்ட பெருங்கதை என்ற நூலில் கரும்பின் ஊறல் எனப்படும் கள் வகை ஒன்று கூறப்படுகின்றது. அழகிய சொக்கநாதர் என்ற அருந்தமிழ்ப் புலவர் மயிலையும் கரும்பையும் காட்டி இரட்டுற மொழிதலாகப் பாடப்பெற்ற பாடல் ஒன்றில் உடலில் கண்களைப் பெறுதல், மன்மதன், முருகன் எனப்பொருள் தரும் வேளால் விரும்பப் பெறுதல், தோகை பெறுதல் அசைந்து ஆடுதல் போன்ற பொதுத் தன்மைகளால் மயிலும் கரும்பும் ஒன்று என்று கூறுகின்றார். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்று கூறி ஒட்டுடன் பற்று இன்றி உலகைத்துறந்த பட்டினத்தாகும் திருவொற்றியூர்ப் பெருமானைத் தீங்கரும்பாகவே காட்டுகின்றார்.
ஓங்குபுகழ் ஒற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு
என அவர் கூறும் மாண்பே மாண்பு.
தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் மங்காத இடம் பெறுவது கரும்பு தெய்வ மணம் கமழும் பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமான் திருமுனைப்பாடி நாட்டில் ஆறுபோலப் பெருகி வரும் கருப்பஞ்சாறு ஆங்காங்கு மலைகளை உடைப்பதாகவும், அவ்வெள்ளத்தைக் கரும்பின் கட்டியாம் வெல்லக் கட்டியால் அடைப்பதாகவும் பேசுகின்றார். இறுதியாக நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாரதியாரால் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் வரும் காப்பியத் தலைவனாகிய கோவலன்-புது மணம் கொண்ட கோவலன் தன் மனைவியாம் கண்ணகியைப் பாராட்டுங்கால்,
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
எனப் பாராட்டும் திறத்தை நாடறியும்; ஏடறியும்
முடிவுரை
இவ்வாறு, இலக்கியம் கண்ட இன்பக் கரும்பு படிக்கப் படிக்க இன்சுவை தரும் என்றால் அதன் பெருமையை என்னென்பது?
********************
4. திலகவதியார்
மாதருக்குள் திலகம் - நாவுக்கரசரை நல்வழிப்படுத்திய நங்கை- திலகவதியார். அவர் வரலாற்றை அருள் சிறப்பை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
திலகவதியார் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் புகழனார். தாய் மாதினியார். இவர் தம்பியே வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க வந்து பிறந்த மருணீக்கியார் இத்திலகவதியாருக்குப் பெற்றோர் கலிப்பகையார் என்ற ஒருவரை மணம் பேசியிருந்தனர். அரசன் ஆணையால் கலிப்பகையார் போர்மேற் சென்றிருந்தார். இடையில் திலகவதியாரின் தந்தையும் தாயும் இறந்தனர் இருமுது குரவரை இழந்த திலகவதியாரும், மருணீக்கியாரும் துன்பக்கடலில் மூழ்கினர், உறவினர் தேற்ற ஒருவாறு தேறினர். போர்மேற் சென்றிருந்த சுலிப்பகையாரும் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கண்டார் துன்பம் தொடர்ந்தே வருமல்லவா ?
இச் செய்தி கேட்ட திலகவதியார் உயிர்விடத் துணிந்தார். தம்பியாம் மருணீக்கியார் அவரைத் தேற்ற முயன்றார். அவர் திருவடிகளில் வீழ்ந்து தம் தாய் தந்தையர் மறைந்த பின்பும் தாம் உயிர் வாழ்ந்திருப்பது அவரை வணங்கப் பெறுவதனால் அவர் உயிர்விடத் துணிந்தால் அவருக்கு முன் தாம் உயிர் துறப்பதாகக் கூறினார் அம் மொழி கேட்ட திலகவதியார் தம்பி வாழத் தாம் வாழ உறுதி கொண்டார். திலகவதியார் உயிர் துறந்திருப்பின் நாம் அப்பர் பெருமான் தொண்டு அறியோம். அவர் உழவாரப்படைச் சிறப்பு அறியோம். ஆதலின் அப்பர் பெருமானை உலகிற்கு அளித்த அன்னை திலகவதியார் எனலாம்.
திலகவதியார் உயிர்வாழ இசைந்தமை கண்ட மருணீக்கியார் மனவருத்தம் நீங்கினார் உலகில் நிலையாமையை உணர்ந்தார். எங்கும் அறச்சாலை தண்ணீர்ப்பந்தல் அமைத்தார் வேண்டுவோர் வேண்டுவன கொடுத்தார். உலகில் சமண மதமே சாலச்சிறந்த மதம் என்று கருதிச் சமணர் நிறைந்த பாடலிபுரம் சென்றார். சமண மதத்தில் சேர்ந்தார்.
உண்மை பல உணர்ந்தார். தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார். சமணத் தலைவராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு பிறமதம் சார்ந்து வாழும் தம்பியின் நிலை குறித்துத் திருவதிகை திலகவதியார் முறையிட்டுத் பிறசமயத்திலிருந்து மாற்ற எம்பெருமானிடம் தம்பியைப் என்று வேண்டும் வேண்டிக்கொண்டார் இறைவனும் திலகவதியார் வேண்டுகோளுக்கு இரங்கி அவர் கனவில் சூலைநோய் கொடுத்துத் தம்பியை ஆட்கொள்வோம்' என்று அருளிச் செய்தார். தருமசேனர் சூலை நோயுற்றார். அந்நோய் அவர் வயிற்றைக் குடைந்து பெரிதும் வருத்தியது சமணர் மயிற்பீலி கொண்டு தடவி அந்நோயை மாற்ற முனைந்தும் பயனில்லை ஒருநாள் ஒருவரும் அறியாதவாறு தருமசேனர் இரவில் திலகவதியார் வாழும் திருவதிகை திருமடத்தை வந்து சேர்ந்தார் தமக்கையின் திருவடிகளில் வீழ்ந்து தம் நோய் தீர்க்க வேண்டினார் தம்மை அடைந்தார் பற்ற்றுக்கும் பெருமான் பாதங்களை வணங்கிப் பணிசெய்வீர்; இது இறைவன் திருவருளே' என்று கூறித் திருநீறு அளித்தார் அதைத் தம் உடலில் பூசிக்கொண்டு திலகவதியார் பின் சென்ற மருணீக்கியார் திருவதிகை வீரட்டானர் கோயிலுக்குச் சென்று சூலை நோய் கூற்றாயினவாறு விலக்ககிலீர் தீரக் எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார், அவர் சூலை நோய் இடம் தெரியாது மறைந்தது. 'உன் திருநாமம் நாவுக்கரசு என்று நிலை பெறுவதாக' என்ற வாக்கு வானில் எழுந்தது அன்று முதல் தருமசேனர் திருநாவுக்கரசரானார்.
முடிவுரை
இவ்வாறு, 'உழவாரம் கொள் செங்கையர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசரை அறப்போர் வீரராக்கிய அன்னை திலகவதியார் என்றால் அவர் நிறையை-பொறையை-மாற்றுரைக்கக் கல் எது ?
**************************
5. மதுரை மாநகர்
முன்னுரை
கூடல், நான்மாடக்கூடல், ஆலவாய், கடம்பவனம் கன்னிபுரம் என்று போற்றப்படும் ஊர் மதுரை மாநகர். இது வரலாறு கண்ட பெரு நகரம். தமிழ் வளர்த்த தன்னேரிலாத பாண்டி மாநகரம். இந்நகரின் சிறப்பை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
பொருள்
மதுரையை வருணிக்கப் புகுந்த ஒரு புலவர் பாண்டி நாட்டைச் செந்தாமரை மலர் என்றார். மதுரை மாநகர் அம்மலரில் திருமகள் வாழும் பொகுட்டு என்றார் இவ்வாறே, பரஞ்சோதி முனிவர் தாம் பாடிய திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் சிறப்பைக் கூற வருங்கால் பாண்டிநாடு எனும் பாங்குறு நங்கைக்கு மதுரை எழில்மிகு திருமுகம் என்றார். இம்மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே சீவன் முத்தி கிடைக்கும் ஆதலின் இந்நகரைச் சீவன் முத்திபுரம் என்பர். இம்மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் அறுபத்து நான்கு திருவிளையாடல் செய்ததாகத் திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. தங்கம் நிகர் சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சி இம்மதுரை மாநகரைக் குறித்துச் சிறப்பாகக் கூறுகின்றது. இந்நூலைப் பாடியவர் மாங்குடி மருதனார் பாண்டி நாட்டில் ஐவகை நிலவளனும் அழகுற அமைந்திருப்பதால் பாண்டியன் பஞ்சவன் எனப்படுவான். இப்பாண்டி நாட்டின் நடுவில் பாங்குற அமைந்ததே மதுரை மாநகர். இங்கு ஆறு கிடந்தாற்போல அகன்ற நெடுந்தெருக்கள் காணப்படும் என்று கூறப்படுகிறது. அங்காடித் தெருவில் பல்வேறு மொழி பேசுவோர் காணப்படுவர். இங்கு நாளங்காடி அல்லங்காடி என இருவகைக் கடைகள் மிளிரும் கோயில்களில் திருவிழா இனிது நடைபெறும் .
சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்' நடுவு நிலைமை பெற்ற அறங்கூறவையம் மதுரையில் விளங்கிற்று. காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர் அன்பும், அறனும் கொண்டு, நன்றும் தீதும் கண்டு பழி இன்றி வாழ்ந்தனர் என்று உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் தம் உரையில் போற்றுகின்றார் மதுரைக் கடைவீதியில் சங்கு வளையல் விற்பார் சிலர் ; மணிகளுக்குத் துளை இடுவார் சிலர்: பூவும் புகையும் விற்பார் சிலர் : ஓவியம் வரைவார் சிலர் பொன்மாற்றுக் காண்பார் சிலர்; புடவைகளை நின்று விற்பார் சிலர் .
மதுரையில் சோறிடும் அறச்சாலைகள் பல இருந்தன. அச்சாலைகளில் பல்வகைக் கனி, காய் இலைக்கறி, ஊன் கலந்த சோறு போன்றவற்றை நாளும் படைப்பர். ஊர்க்காவலர் தம் கடமை வழுவாது ஊரைப் பாதுகாத்து வருவர்.
இவ்வாறே பத்துப்பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையிலும், மதுரை மாநகரின் சிறப்பு அழகு பெறக் கூறப்படுகின்றது. பாண்டியரின் தலைநகராம் மதுரை வாயிலில் பகைவரைப் போருக்கு அழைப்பதுபோல் மீனக்கொடிகள் உயர்ந்து விளங்கும் என்று கூறப்படுகின்றது. இன்னும் கோட்டை வாயிலில் பந்துகளும், பாவைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும் இதன் மேற்கில் அமைந்திருப்பதே முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருப்பரங்குன்றம்.
எட்டுத்தொகைகளில் ஒன்றாகிய பரிபாடல் மதுரையின் சிறப்பைக் கூற வருங்கால் உலகே வாடினும் தான் வாடாத தன்மை கொண்டது மதுரை மாநகர் என்று கூறுகிறது அம்மதுரை மாநகரை ஒரு தராசுத்தட்டிலும், மற்ற உலகப் பொருள்களை மற்றொரு தட்டிலும் வைத்தாலும் மதுரைத்தட்ட தாழ்ந்து இருக்கும் என்று கூறுகிறது.
'ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் மதுரை, திருமால் உந்தியில் மலர்ந்த தாமரை மலர் என்கின்றது. அதன் தெருக்கள் தாமரை இதழ்களாம். இறைவன் கோயில் அம்மலர் நடுவில் இருக்கும் பொகுட்டாம். மக்கள் மகரந்தமாம். புலவர்கள் வண்டினமாம், என்னே! ஆசிரியர் காட்டும் கற்பனை நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் மதுரையில் நால்வகைப் பொன் விற்கும் கடைவீதி, பட்டினும் மயிரினும், பருத்தி நூலினும் ஆடை நெய்யப்பட்ட அறுவை வீதி, கூல வீதி போன்ற பல விதிகளைப் பற்றிக் கூறுகின்றது.
பாவை பாடிய வாயால் திருக்கோவை பாடிய மணிவாசகப் பெருந்தகையார் மதுரையில் சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்த உண்மையை,
கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழ் என்ற தொடரால் குறிப்பிடுகின்றார் திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளாம் சிவபெருமானே இறையனார் என்ற பெயரோடு சங்கப் புலவருள் ஒருவராகத் தாமும் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கூறப்படுகின்றது.
குமரகுருபரர் மதுரையில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் மீது மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் என்ற ஒரு நூல் பாடியுள்ளார் பாண்டியன் அறிவுடைநம்பி போன்ற அரசர்களும் மதுரையிலிருந்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களே.
முடிவுரை:
இவ்வாறு சங்கம் கண்டது - தமிழ் வளர்த்தது - தெய்வமணம் கமழ்வது வரலாற்றுச் சிறப்புடையது நம் மதுரை மாநகர் என்றால் அதன் பழமையை பெருமையை அளவிட்டு உரைக்க முடியுமா?
*****************************
No comments:
Post a Comment
thaks for visiting my website